மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை.
சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிவசேனாவின் செயல் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது எனவும், பாஜகவை தொடர்ந்து அவமதிக்கும் செயலில் அக்கட்சி ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவசேனா கட்சித் தலைவரும் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘சொன்ன சொல்லிலிருந்து பின்வாங்கக்கூடாது என்ற பண்பை நான் எனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன். கூட்டணி பேச்சின்போது சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகாலம் முதலமைச்சர் பதவி தருவேன் என அமித்ஷா என்னிடம் தெரிவித்தார். ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின் பாஜக தனது வாக்குறுதியிலிருந்து பின் வாங்குவது வருந்தத்தக்க செயல்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘மோடி என்னைத் தனது தம்பி என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். நான் ஒருபோதும் மோடியை விமர்சித்து பேசியதில்லை. ஆனால் நான் மோடியை விமர்சனம் செய்தேன் என பாஜக பொய் கூறிவருகிறது. 105 இடங்களை வைத்து பாஜக எப்படி அடுத்த ஆட்சி எங்களுடையது என்று கூற முடியும். அப்படியென்றால் ஆட்சியமைத்து பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டியது தானே’ என சவால் விடுத்தார்.
இறுதி முடிவு பாஜக கையில்தான் உள்ளது என்ற உத்தவ் தாக்கரே, பாஜகவுக்கு எப்படி பல்வேறு வழிகள் உள்ளனவோ அந்த வழிகள் சிவசேனாவுக்கும் பொருந்தும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.