சட்ட விரோதமாக 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் மது விற்று வந்த இருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள அரசு மதுபானக்கடை (டாஸ்மாக்) 24 மணி நேரமும் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மது போதையில் சிலர் அவ்வழியே செல்லும் மக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களையும் சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
இது போன்ற சமூகச் சீர்கேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதியினர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், ஆதம்பாக்கம் காவல் துறையினர் இதை கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பொது மக்கள் தெற்கு மாவட்ட இணை ஆணையர் மகேஷிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியை நோட்டமிட்ட தனிப்படை காவல்துறையினர், அதிகாலை டாஸ்மாக்கில் அமோக விற்பனையைக் கண்டதும் அதிரடியாக உள்ளே சென்று, 400 மதுபானங்களையும் 2000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றி, விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இருவரைக் கைது செய்தனர்.