கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வெளிச்சங்குடி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தின் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அருகிலிருந்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்து கிணற்றின் அருகே சென்று பார்த்துள்ளார். அந்தக் கிணற்றில் சிறுவனொருவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே செய்வதறியாது தவித்த அந்தப் பெண் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றுவதற்காக தெருவில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
பின்னர் அங்குள்ள வாலிபர்கள் விரைந்து சென்று சிறுவனை கயிறு கட்டி காப்பாற்றுவதற்காக முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். அதன்பின் இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் ஆண்டிமடம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர் நீரில் மூழ்கிய அந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அந்த சிறுவன் யார்? என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் கிணற்றில் விழுந்த அந்த சிறுவன் சூரப்பள்ளம் கிராமத்தில் வசித்து வரும் ஞானவேல் என்பவரின் மகனான வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அந்த சிறுவனை நெடுநேரமாக அவனது குடும்பத்தினர் தேடி வந்ததும், வெளிச்சங்குடி பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இருட்டில் கிணறு இருப்பது தெரியாமல் சிறுவன் தவறி விழுந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.