சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. போன்ஸ்லே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய் மற்றும் பங்கா, மணிகர்னிகா தி குயின் ஆஃப் ஜான்சி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெற்றனர்.
மேலும் தமிழ் திரையுலகில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது, அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, கேடி (எ) கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஜூரி சிறப்பு தேர்வு விருது, கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, ‘சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக எனக்கு தேசிய விருது கிடைத்ததற்கு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தான் காரணம்’ என தெரிவித்துள்ளார்.