பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்னும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், “மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.
கருப்புப் பண ஒழிப்பு, தீவிரவாதத்திற்கு நிதி திரட்டுவதை தடுப்பது மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.50 நாட்களில் இது நடைபெறவில்லை என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று அவர் கூறியிருந்தார். இதில் எதுவுமே நடைபெறவில்லை, இதனால் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தற்போது பல்வேறு அமைப்புகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்கின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தாக்கம் உள்ளது. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. அமைப்பு சாரா தொழில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது, சிறு தொழில்கள் அழிந்துவிட்டது, கூட்டுறவு வங்கிகள் பெரும் பாதிப்பை சந்தித்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்தை பாதித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழிக்கப்படவில்லை, கள்ள நோட்டும் தற்போது புழக்கத்தில் உள்ளது, முன்பவைவிட குறைவான அளவில் இருந்தாலும் அவை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இணைய வழிப் பணப்பரிவர்த்தனை செய்ய போதுமான வசதிகள் இல்லை. மக்கள் பெரும்பாலும் நாணய பரிமாற்றத்தையே விரும்புவதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.
இதற்கு முன்பும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நடைமுறையில் உள்ள பொருளாதாரம் பாதிக்காத வகையில் செய்யப்பட்டது. ஆயிரம் ரூபாயும் ஐநூறு ரூபாயும் செல்லாது என்று கூறி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டனர். தற்போது அதனையும் செல்லாது என அறிவித்து மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடப்போவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஒரு துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது” என்று கூறினார்.