பாகிஸ்தானில் இரு பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் கைபர் பக்துன்வாம் மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் ஹைடு மற்றும் பிவர் ஆகிய 2 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவ்விரு பழங்குடியின மக்களும், குர்ரம் மாவட்டத்தின் வனப்பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று கருதுகின்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வனப்பகுதி குறித்து அவ்வப்போது மோதல்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, தெரீ மேகல் கிராமத்தின் வனப்பகுதியில் பிவர் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க சென்றனர். அதே சமயத்தில், அங்கு வந்த ஹைடு பழங்குடியினர் சிலர், “இது எங்களுக்கு சொந்தமான பகுதி. இங்கு விறகு எடுக்கக்கூடாது” என்று கூறி பிவர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, வாக்குவாதம் முற்றிய நிலையில், பிவர் இன மக்கள் மீது ஹைடு பழங்குடியினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பிவர் இன மக்கள் சிலர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இருதரப்பினர் இடையே வன்முறை வெடித்தது. மேலும் இரு தரப்பினரை சேர்ந்த மக்களும், ஒவ்வொரு கிராமத்திலும் புகுந்து மோதலில் ஈடுபட தொடங்கினர். இதுவரை, 15 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த வன்முறையை கட்டுப்படுத்த, குர்ரம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, வதந்திகள் பரவுவதை தடுக்க தொலைப்பேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.