மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமியான நியா லிம்போபிளாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னைப் போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வருகிறார். இவரின் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இளம் வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் வரை நிதி திரட்டுவதை இலக்காக கொண்டு அதற்காக உழைத்து வருகிறார். ஆன்லைன் மூலம் சாக்லேட், சோப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார்.எலுமிச்சை, ரோஜா, கற்றாழை உள்ளிட்ட பல்வேறு பிளேவர்களில் ஒரு சோப்பை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்.
இதற்கு முன்னதாக விற்பனை மூலம் கிடைத்த தொகையை தெரு நாய்களுக்கு உதவி செய்யும் மும்பையைச் சேர்ந்த என்.ஜி.ஓ என்ற நிறுவனத்திற்கு கொடுத்தார். தற்போது கிடைக்கும் நிதி அனைத்தையும் Give India என்ற நிறுவனத்திற்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலமாக சிறுவயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் இந்த சேவையை செய்து கொண்டிருக்கிறார். சிறுமியின் இந்த செயலை கண்டு ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர் மற்றும் உதவிகளை செய்து வருகின்றன. இவரைப் பற்றி கூற வேண்டுமானால் கடந்த ஜூன் மாதம் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு இருக்கும் புற்றுநோய் லிம்போபிளாஸ்டிக் என்று அழைக்கப்படுவது. தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பள்ளிப் படிப்பையும் முடிந்தளவுக்கு தொடர்ந்து வருகிறார்.