தமிழகம், தெற்கு ஆந்திர மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. அதன் காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.