டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. மேலும் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது, கேடி(எ) கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனுக்கு சிறந்த நடுவர் தேர்வு விருது, விஸ்வாசம் படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.இமான், ‘இணைய வாயிலாகவே இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துவிடுமோ என்று அச்சம் இருந்தது. ஆனால் இறைவன் சூழலை இலகுவாக மாற்றி அனைவரையும் நேரில் வந்து விருது பெறும் நிலையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினி விருது பெறும் அதே மேடையில் நானும் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி. அவர் விருது பெறுவதை நான் பார்ப்பதும், நான் விருது பெறுவதை அவர் பார்த்து மகிழ்ந்ததையும் பாக்கியமாக கருதுகிறேன். இசைத்துறையில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். எனக்கு எல்லாமே இசைதான். இசையோடு இசைந்திருப்பதே எனது இலக்கு. எனது பயணம் விருதை நோக்கியது இல்லை’ என தெரிவித்துள்ளார்.