நடிகர் சிம்பு மீது பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நான் கடந்த 2016-ஆம் ஆண்டு சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த படம் 50% நிறைவடைந்த நிலையில், சிம்பு என்னை அழைத்து இத்துடன் இந்த படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்றும், ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நான் இலவசமாக ஒரு படத்தை நடித்து தருகிறேன் என்றும் உறுதியளித்தார். இதனால் படத்தை வெளியிட்டேன். ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் ரூ.15 கோடி வரை எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த படத்தை என்னால் தயாரிக்க முடியவில்லை. அதேநேரம் சிம்பு தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்தார்.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போதைய தலைவரான விஷால் மற்றும் நிர்வாகிகள் விரைவில் ஒரு படம் நடித்துத்தர வேண்டும் எனக் கூறியபோது ஒப்புக் கொண்டனர். ஆனால் நிர்வாகம் மாறிய பின் அதெல்லாம் முடியாது என கூறி தற்போதுவரை இழுத்தடித்து வருகின்றனர். எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எனக்கு ஒரு நல்ல முடிவை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஆரம்பத்திலிருந்தே பொய்யான உறுதியளித்து எனக்கு பெரும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மீதும், அவரது தாய், தந்தை மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.