தெலுங்கு நடிகர், நடிகையர் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்புக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஷ்ணு மஞ்சு அணி வெற்றி பெற்றது. மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் மா அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பேசிய மா அமைப்பின் தலைவர் விஷ்ணு மஞ்சு, ‘நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு பரப்புவதும், வதந்திகள் பரப்புவதும், அவர்களின் புகழை கெடுப்பதும் நல்ல விஷயங்கள் அல்ல. உண்மையைக் கூறி, ஆரோக்கியமான கருத்துக்களைப் பரப்பினால் ஆட்சேபனை இல்லை. ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்காக சில யூடியூப் சேனல்கள் சில நடிகர்களை குறிவைத்து தாக்குவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது . இதுபோன்ற யூடியூப் சேனல்கள் எல்லைமீறி சென்றால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.