மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த போதும் நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தற்போது மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த ஜாமீன் மீதான மனு விசாரணையில் ஆர்யன் கான் சார்பில் மத்திய அரசின் முன்னாள் அடர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடுகிறார். இந்நிலையில் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க கூடாது என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவும் அவர் முயற்சித்துள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஐகோர்ட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.