தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நிலம் வாங்க முடிவெடுத்து, கமலக் கண்ணன் என்ற ரியல் எஸ்டேட் அதிபரை அணுகியுள்ளார். இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 1.25 கிரவுண்ட் நிலம் விற்பனைக்கு வருவதாகக் கமலக்கண்ணன் கூறியுள்ளார். நிலம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் கேட்டுள்ளார்.
அப்போது முகமது பாட்ஷா என்பவரது நிலம் எனக்கூறி, ஆவணங்கள் சிலவற்றைக் கமலக் கண்ணன் கொடுத்துள்ளார். ஆனால், ஆவணங்களில் புகைப்படத்திலுள்ள நபர் இஸ்லாமியர் போன்று இல்லை என்று சந்தேகமடைந்த, பாலசுப்பிரமணியம் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கமலக்கண்ணன், அவரது மாமனாரின் புகைப்படத்தை வைத்து போலி ஆவணங்கள் தயாரித்தது தெரிய வந்தது.
மேலும், கமலக்கண்ணனின் மாமனார் ஹென்றியும், பெரம்பூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது தெரிய வந்தது. எனவே மாமனார் மற்றும் மருமகன் இணைந்து போலி ஆவணங்கள் மூலம், தொழிலதிபரை மோசடி செய்யத் திட்டமிட்டது அம்பலமானதால், இருவரையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.