காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சோளியக்குடி பேருந்து நிலையம் அருகே சென்ற போது 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், நாகை மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையில் விசாரணை நடத்தியதில் 1 1/2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.