சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக கூண்டில் பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்குட்டி கட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இகட்புறி என்ற இடத்தில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால், அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்திருந்தனர். அதில் பிறந்து 2 மாதம் ஆன நாய் குட்டி கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்த மக்கள் அனைவரும் உணவும், தண்ணீரும் அளித்தனர். வழக்கமாக சிறுத்தைகளை பிடிப்பதற்கு கோழி, ஆடு போன்றவை மட்டுமே கூண்டுக்குள் கட்டப்படும் நிலையில் நாய்க்குட்டி கட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி தெரிவித்தபோது விலங்குகளை கவர்ந்து பிடிக்கும் நோக்கில் உயிருள்ள இரைகள் வைக்கப்படும்போது அவை தனி கூண்டியிலேயே கட்டப்படும் என்பதால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் நாய்குட்டி ஏதோ தவறு காரணமாக கட்டப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார். பின்னர் கூண்டிலிருந்து நாய்க்குட்டி வெளியில் விடப்பட்டது.