தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இன்றும் நாளையும் சூறாவளிக் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.