தனியார் பள்ளி ஆசிரியரை கடத்திய வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உப்புபாளையம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஆத்தூராம்பாளையத்தில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த ஆசிரியரின் தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆசிரியரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து கட்டாய திருமணம் செய்ய முயன்ற சீனிவாசனை பிடித்து திருச்செங்கோடு ரூரல் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சீனிவாசன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கிற்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி தனியார் பள்ளி ஆசிரியரை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சீனிவாசனுக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனையும், 16,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.