புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு நவம்பர் 8 முதல் பள்ளிகள் திறக்கப்படும். நகரில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், கிராமங்களில் 9:30 முதல் மதியம் 1 மணி வரையும் பள்ளிகள் செயல்படும் என்றார். மேலும் அவர், வருகைப் பதிவேடு கிடையாது, சுய விருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது. 1 முதல் 8ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.