மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, ஏற்கனவே மாவட்டங்களின் பல்வேறு பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வரும் 29,30 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வரும் 29,30,31 ஆகிய 3 நாட்கள் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் வரும் 27 முதல் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.