பூமியின் சராசரி தட்பவெப்பம் இந்த நூற்றாண்டில் 2.7℃ உயரும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூமியின் சராசரி தட்பவெப்பம், சமீபத்திய சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு, பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசு குழுவால் ‘பாரிஸ் ஒப்பந்தம்’ ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், உலக நாடுகள் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2℃-க்கு மிகாமல் குறைக்க இலக்கு நிர்ணயித்தனர்.
இது குறித்து ஐ. நா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “கரியமில வாயு (carbon di oxide) உமிழ்வை கட்டுப்படுத்த உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் இலக்கை அடைவது கடினம். மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்ப அதிகரிப்பை 2℃-க்குள் வைப்பதற்கு கரியமில வாயு உமிழ்வை 30 சதவீதம் குறைக்க வேண்டும். அதோடு, வெப்ப அதிகரிப்பை 1.5℃-க்குள் வைப்பதற்கு கரியமில வாயு உமிழ்வை 55 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியது.
இந்த நிலையில், கரியமில வாயு உமிழ்வு அதிகளவில் வெளியேற புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடே காரணமாகும். அதிலும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வெளியேறும் புகையால் கரியமில வாயு உமிழ்வு அதிகரிக்கிறது. மேலும், கடந்த 250 ஆண்டுகளில் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அடர்த்தி பன்மடங்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த சமயத்தில்தான் தொழில் புரட்சிகளும், தனிமனித வசதி வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.