போலியான ஆவணங்களை தயாரித்த குற்றத்திற்காக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வடபழனி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அம்பத்தூரில் வசிக்கும் ராஜேந்திரா, அமலா, அருள் ஜோதி ஆகியோர் திருவான்மியூர் வால்மீகி நகரில் இருக்கும் 32 கிரவுண்ட் நிலத்தை 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய கதிரேசனிடம் விலை பேசியுள்ளனர். இதனையடுத்து முன்பணமாக 5 லட்ச ரூபாயை கதிரேசன் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு நிலத்தின் ஆவண நகல்களை வாங்கி சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கதிரேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரா, அருள்ஜோதி உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.