பாதை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாடுகளுடன் மனு கொடுக்க சென்ற தாய் மற்றும் மகனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு க. மாமனந்தல் பகுதியில் வசிக்கும் தங்கராஜ் மனைவியான காமாட்சி மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவரும் மாடுகளுடன் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்போது கலெக்டரின் அலுவலக நுழைவாயிலில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தாய், மகன் இருவரையும் சமாதானம் கூறி காவல்துறையினர் தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து காமாட்சியும் அவரின் மகனும் மாடுகளை கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே கட்டிப் போட்டுவிட்டு அவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது, தனக்கு சொந்தமான ஒரு சென்ட் இடத்துக்கு 3 அடி அகலம், 18 அடி நீளமும் பாதை வசதி இருக்கிறது.
இந்த பாதையை மறிக்கக்கூடாது என நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாண்டியன் என்பவர் பாதையை மறித்து கம்பி வேலி அமைத்து தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் மாடுகளுக்கு தண்ணீர் மற்றும் தீவனம் வைக்க செல்வதற்கு வழி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியை அகற்றி தர வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.