தமிழ்நாடு பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “சில நேரங்களில் ரஜினிகாந்த்தின் கருத்துகள் பாஜகவுடன் ஒத்துப் போகலாம். அதேபோல் பல்வேறு சமயங்களில் ஒத்து போகாமலும் இருந்துள்ளது. அவர் பாஜகவுடன் இணைந்து பணியாற்றப்போவதாக கருத்துருவாக்கத்தை சிலர் உருவாக்க நினைக்கிறனர்.
அவர் தன்னுடைய அரசியல் விருப்பத்தை மிக தெளிவாக மக்களுக்கு விளக்கியிருக்கிறார். அவ்வப்போது தன் நிலைப்பாட்டையும் சொல்லிக் கொண்டிருப்பவர். பாஜகவுக்கும் தனக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை ரஜினிகாந்த் கூறியுள்ளார். தனக்கு கொடுக்கப்படும் நிறம் குறித்து அவர் பதிலளித்துள்ளார்.காவி நிறம் என்பது இந்த நாட்டினுடைய நிறம். இந்த நாட்டில் இருக்கும் பல்வேறு நிறத்தைப்போல அதுவும் ஒன்று. ஆனால், காவி நிறத்திற்கு என்று இந்த நாட்டில் ஒரு மரியாதை இருக்கிறது” என்றார்.