அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பு இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வெளியிட்டது.
அதில், “சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்திலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, “அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாகவே காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இதனை வைத்து அரசியல் செய்யும் பாஜகவின் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன” என்றார்.