பெகாசஸ் ஒட்டு கேட்கும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலரது செல்போன் உரையாடல்களை பெகாசஸ் என்ற செயலி மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்டது என்கின்ற சர்ச்சை சில மாதங்களுக்கு முன்பு பூதாகரமாக வெடித்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பினர். பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பத்திரிக்கையாளர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 13ஆம் நாள் முடிவடைந்தது.அப்போதே நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. அப்போது பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மேலும் இந்த குழு 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த குழுவு உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இயங்கும் எனவும் தீர்ப்பளித்தது. மேலும் தேச பாதுகாப்பு என்கின்ற பெயரில்மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.