தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்த வீடுகளை ஊராட்சி தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதில் கொமராபாளையத்தில் 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த தொடர்மழையால் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் மாதேஸ் என்பவரது வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரது ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது மாதேஷ் மற்றும் விஜயா குடும்பத்தினர் தங்களது வீடுகளில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், துளசிமணி ஆகியோரது வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வீடுகளும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர் எஸ்.எம்.சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு அரசின் சார்பாக நிவாரணம் வழங்கப்படும் என்று ஊராட்சி தலைவர் தெரிவித்தார். அப்போது நில வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி சிலம்பரசன், ஊராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்தியா பழனிச்சாமி, அ.தி.மு.க. கிளை செயலாளர் ராசு, வார்டு உறுப்பினர் வசந்தி உட்பட பெரும்பாலானோர் அவருடன் இருந்தனர்.