கோவையில் குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து, அதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் அறிகுறி தோன்றியதால் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் காய்ச்சல் என்று கோவை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, டெங்கு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது, கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோய் என்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 81 பேர், டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உட்பட 4 பேர், மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 80 நபர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் பாதிப்பு தோன்றினால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார்.