தமிழக சட்டமன்றம் வெட்டிமன்றமாகவும் புராணங்களை பாடும் மன்றமாகவும் செயல்படுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்றுவரும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 220ஆவது குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முக்குலதோர் புலிபடை தலைவர் கருணாஸ் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் எனவும், பாராளுமன்ற வளாகத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் மருது சகோதரர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
தனிப்பட்ட சமுதாயத்திற்க்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கியது மற்ற சமுதாயத்தை வஞ்சிப்பது போன்று உள்ளதாக கூறிய அவர், சட்டமன்றம் வெட்டி மன்றமாகவும் புராணங்களை பாடும் மன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அதில் அவர், “ஒரு சில சமுதாயங்களை தன்வசம் வைத்துக்கொண்டு மற்ற சமுதாய மக்களை இந்த சமூகத்திற்கு எதிரான சமூகமாக மாற்ற கூடிய ஒரு கீழ்த்தரமான செயலை செய்ததை கண்டித்து எடப்பாடியின் தலைமையில் இருந்த அரசினுடைய கூட்டணியை முறித்துக் கொண்டவன் நான்.
பொதுவாகவே சட்டமன்றம் ஒரு வெட்டி பட்டிமன்றமாக இருக்கிறது என்பதுதான் என்னை போன்றவர்களுடைய கருத்து. அதாவது இதை நான் செய்கிறேன். இதை நான் செய்தேன். இதை நீங்கள் செய்தீர்கள். அதற்கு முன்பாக என்ன செய்தீர்கள். நீங்கள் செய்ததை தான் நாங்களும் செய்திருக்கிறோம். இது போன்ற புராண பாடல்களைப் பாடக் கூடிய ஒரு மன்றமாகத்தான் சட்டமன்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.