பிரித்தானியாவின் 2 மீன்பிடி படகுகளை பிரான்ஸ் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரெக்சிட்டிற்கு பிந்தைய மீன்பிடி உரிமை பிரச்சினைகள் தீவிரமடைந்தது. பிரெக்சிட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுதலை குறிக்கிறது. இந்த நிலையில், பிரித்தானியா படகை பிரான்ஸ் அரசு சிறைபிடித்ததால் இரு நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸின் கடல்சார் அமைச்சகம் ட்விட்டரில், “நேற்ற Le Havre-இல் நடைபெற்ற சோதனையில் 2 பிரிட்டிஷ் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில், முதல் படகு வாய்மொழி உத்தரவுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது. மேலும், 2 ஆவது படகிடம், எங்கள் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான உரிமம் இல்லை. எனவே, அந்த படகு கடற்கரைக்கு திரும்ப அனுப்பப்பட்டு நீதித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது” என பதிவிட்டிருந்தது.
இது குறித்து, பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் கிளெமென்ட் பியூன் நேற்று எச்சரிக்கை விடுத்தார். அதில் அவர் கூறியதாவது, “இந்த மீன்பிடி பிரச்சனைகளை விரைவில் தீர்க்க வேண்டும். இல்லையெனில், வருகிற நவம்பர் 2 ஆம் தேதி முதல் பிரித்தானியாவுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.