குளிக்கச் சென்றபோது ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடியில் பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் தச்சு தொழிலாளியாக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் பாபு லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணாற்றில் கரையோரத்தில் உள்ள படித்துறை முன்பு பாபு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளார். அப்போது திடீரென பாபு ஆற்றில் மூழ்கி மாயமானார். அதன்பின் அவ்வழியாக சென்றவர்கள் பாபுவின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள் படித்துறையில் நீண்ட நேரமாக கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆற்றிலிருந்து பாபுவின் சடலத்தை தீயணைப்புதுறை வீரர்கள் மீட்டனர். இதனைதொடர்ந்து பாபுவின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.