பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிழக்கு கள்ளிபுரத்தில் கூலித்தொழிலாளி தீர்த்தன் வசித்து வருகின்றார். இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மாதையன் என்ற மகனும், தனலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாதையன் மாரண்டஅள்ளியில் தங்கி அதே பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதில் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவரும் கள்ளிபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களில் தீர்த்தனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம்போல் தீர்த்தன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் மது போதையில் இருந்த தீர்த்தன் தனது மனைவி ரங்கம்மாளை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத்தொடர்ந்து தீர்த்தன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பொன்னகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கியிருந்த தொழிலாளி தீர்த்தனை கைது செய்தனர்.