Categories
கிரிக்கெட் விளையாட்டு

#AFGvWI : பூரானின் அதிரடியில் வெ. இண்டீஸ் வெற்றி …!!

ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனெவே கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

அதிரடியாக விளையாடிய சாய் ஹோப்

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப், எவின் லீவிஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அதிரடியாக விளையாடிய லீவிஸ் அரை சதமடித்து அசத்தினார்.

பந்தை பவுண்டரிக்கு விளாசிய பூரான்

பின்னர் ஷாய் ஹோப் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து லீவிஸும் 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய சிம்ரான் ஹெட்மையரும் 34 ரன்களில் நடையைக் கட்டினார்.

பின் விளையாடிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் நிக்கோலஸ் பூரான் எதிரணி பந்து வீச்சை சிதறடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பூரான் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐம்பது ஓவர்கள் முடிவில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன் உல் ஹக் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காத்திருந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாவேத் அஹ்மதி ரன் எடுக்காமல் ஷெல்டன் காட்ரல் பந்தில் டக் அவுட் ஆனார்.

இதனை அடுத்ததாக வந்த வீரர்களும் பெரிதாக ரன் குவிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 45.4 ஓவர்களில் 200 ரன்கள் குவித்து ஆட்டமிழந்ததால் வெஸ்ட் இண்டீஸ்  அணி 47 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நஜிபுல்லாஹ் சட்ரன் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ்  அணி சார்பில் ஷெல்டன் காட்ரல் , ரோஸ்டோன் சாஸ் , ஹைன் வாலஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட் எடுத்தனர். சிறப்பாக ஆடிய பூரான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Categories

Tech |