சூதாட்டம் விளையாடிய 23 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்டூர்வட்டம் பகுதியில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் அதிக சத்தம் கேட்டுள்ளது. இதனை அடத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு வாலிபர்கள் காசு வைத்து சூதாட்டம் விளையாடியது தெரியவந்துள்ளது.
அதன்பிறகு அந்த கட்டிடத்தின் உரிமையாளரான கண்ணன் என்பவர் காசு வைத்து சூதாட்டம் விளையாட அனுமதி கொடுத்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சூதாட்டம் விளையாடிய முருகேசன், கண்ணன், ராஜ், ஜெயக்கண்ணன், சோமசுந்தரம், கணேஷ் பாபு உள்ளிட்ட 23 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த 90 ஆயிரத்து 325 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.