மருத்துவமனை வளாகத்தை சுற்றி இருக்கும் புதர்களை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி சாலையில் அரசு மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் 200-க்கும் அதிகமான புற நோயாளிகளும் மற்றும் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து காரணத்தினால் மருத்துவமனையைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இதன் காரணத்தினால் மருத்துவமனை வளாகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உள் நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் பயத்துடன் இருந்து வருகின்றனர். பின்னர் 2 நாட்களுக்கு முன்பாக நல்ல பாம்பு ஒன்று மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை பிடித்துள்ளனர். மேலும் மருத்துவமனை வளாகத்தை சுற்றி இருக்கும் புதர்களை உடனடியாக அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.