சீனாவில் ஏற்கனவே இரண்டு நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று ஹெய்கே நகரத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவில் 2019 இன் இறுதியில் கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், சீனாவில் சமீபகாலமாக கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை வெளி ஊரில் இருந்து வருபவர்களால் பரவுகின்றன.
மேலும் பல நோய்த்தொற்றுகள் அறிகுறி அற்ற பாதிப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், உள்ளூர் பாதிப்புகள் அடையாளம் கண்டுபிடிக்கபட்ட சீனாவின் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் அமைந்துள்ள லான்சூ நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே போல் கடந்த புதன்கிழமையும் சீனா – மங்கோலியா எல்லையில் உள்ள எஜின் பேனர் நகரில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சீனாவின் வடகிழக்கு எல்லையான ஹெய்லோஜாங் மாகாணத்தில், ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஹெக்கே நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்குச் சட்டத்தின் போது நகரில் அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் திறக்கப்படும் என்றும் மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.