காங்கேயம் அருகே தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மூன்று லட்சம் மதிப்பிலான 350 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை தலைமையிலான அலுவலர்கள் காங்கேயம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், திருவள்ளுவர் வீதியில் மொத்த வியாபாரம் செய்துவரும் கிருஷ்ணகுமார் என்பவரது கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ புகையிலைப் பொருட்கள், ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும், புகையிலைப் பொருட்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனையின் முடிவை பொறுத்து வழக்கு தொடரப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.