சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தைவான் அதிபர் பேட்டி அளித்துள்ளார்.
சீனாவில் நடந்த உள்நாட்டு போரினால், தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் சீனா, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி வருகின்றது. ஆனால், தைவான் சுதந்திர ஜனநாயக நாடாக திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 8 ஆம் தேதி தைவானை சீனாவுடன் மீண்டும் இணைப்போம் என அதிபர் Xi Jinping கூறியது உலக அரங்கில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மேலும், தைவானுக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்தவும் சீனா தயங்காது என்ற தகவலை அந்நாட்டு அலுவலக செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, சீன போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து வருகிறது. இதனால் சீனா, தைவான் இடையேயான மோதல் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சம்பவம் குறித்து தைவான் நாட்டு அதிபர் Tsai Ing-wen, பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தைவானில் 2.30 கோடி மக்கள் தினமும் தங்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக பாதுகாப்பை உறுதி செய்ய போராடுகின்றனர். சீன அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
இந்த முயற்சியில் நாங்கள் தோல்வி அடைந்தால், போராட்டத்தில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும். அமெரிக்கா எங்களின் இராணுவ திறனை அதிகரிக்க பெரிது உதவுகிறது. எனவே, உலகளவில் நம்பிக்கையும், ஜனநாயக மதிப்பீடுகளையும் நிலைநிறுத்த தைவான் பாதுகாக்கப்பட வேண்டும்” என கூறினார். மேலும், முதன் முறையாக அமெரிக்க இராணுவ படை தைவானில் பயிற்சியில் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் ஒப்புக்கொண்டாலும், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை.