இந்திய பெருங்கடல் மட்டுமின்றி பசிபிக் கடலின் பிராந்திய பாதுகாப்பிலும் இந்தியா ஒத்துழைக்குமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்தினர். இதில் அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகனின் பாதுகாப்புத்துறை துணை மந்திரியான காலின் எச்கால் கூறியதாவது, “ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. ஆப்கானின் நிலையற்ற அரசால் இந்தியா மிகவும் கவலை கொள்கிறது.
இதனால் பயங்கரவாத செயலுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்றவும், உளவுத்துறையின் தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது. இதில் முடிந்த வரை அமெரிக்க அரசு ஒத்துழைப்பு அளிக்கும். அதே சமயம், இந்திய பெருங்கடல் மட்டுமின்றி, பசிபிக் கடலின் பிராந்திய பாதுகாப்புகளிலும் இந்தியா அரசு ஒத்துழைக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து, ஆப்கான் குறித்த இந்திய கொள்கைகள் பெரும்பாலும் பாகிஸ்தான் உடனான மோதல் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அதோடு, காஷ்மீர் பிரச்சினையும் இதில் மையமாக இருக்கிறது. எனவே, ஆப்கான் தொடர்பான விஷயங்களில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம். மேலும், ஆப்கான் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை” என்றும் அவர் கூறினார்.