ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா சபையானது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு அந்நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அங்கு சுமார் 99% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.
மேலும், சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் போன்று பல இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், 2 கோடியே 80 லட்சம் மக்கள் உணவிற்காக திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று உலக உணவு திட்ட அமைப்பு வருத்தம் தெரிவித்திருக்கிறது.
மேலும், அங்கு வேலையின்றி அதிக மக்கள் திண்டாடி வருகிறார்கள். எனவே தொண்டு நிறுவனங்கள் பல, பசியால் வாடுபவர்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்கள் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறது. காபூல் நகரில் ஜெர்மன் அமைப்புகளும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
அந்த பொருட்களை வாங்க மக்கள் பரிதாபமாக நின்று கொண்டிருந்த காட்சி மனதை நொறுக்கும் விதமாக உள்ளது. தலிபான்கள் அரசு, இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு செல்ல ஐ.நா உதவி புரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.