சர்வைவர் நிகழ்ச்சி குறித்து காயத்ரி பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி வெளியேறினார். அம்ஜத்கானிடம் தோல்வி அடைந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே கொடுக்கப்படும் டாஸ்குகளில் அவ்வப்போது மட்டும் தான் காயத்ரி வெற்றி பெற்றிருக்கிறார். அதிக அளவு தோல்வியை சந்தித்து மூன்றாம் உலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் மூன்றாம் உலகத்தில் 40 நாட்களுக்கு மேல் தங்கிய போட்டியாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சி குறித்து பேசிய காயத்ரி, ‘மூன்றாம் உலகத்தில் வாழ்வது கொடுமையான ஒன்று. அங்கு உண்ணுவதற்கு எதுவுமே கிடைக்காது. உறங்குவது கூட கடினமான விஷயம். அங்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் பட்டினியாக இருந்தேன். பிறர் சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்த உணவை தான் உண்டு வாழ்ந்தேன். கடல் காற்றால் இரவு நேரங்களில் அதிகமாக குளிரும். உறங்குவதற்கு அங்கு கட்டைகள் மட்டுமே இருக்கும். போர்த்திக்கொள்ள போர்வை கூட கிடையாது. மூன்றாம் உலகம் கிட்டத்தட்ட நரகத்தை போல் இருந்தது’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் இனி வாழ்நாளில் தனக்கென ஒன்றுமே இல்லை என்கிற நிலை வந்தால் கூட, தன்னால் அதிலிருந்து மீண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கையை சர்வைவர் நிகழ்ச்சி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.