குடோனில் பதுக்கி வைத்திருந்த கோதுமை மற்றும் அரிசி முட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலடி ரோட்டில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் குடோனுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 4,400 கிலோ கோதுமை மற்றும் 7 3/4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் கூடுதலாக மூட்டைகளை தைக்கும் எயந்திரம் மற்றும் சாக்குகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பதுக்கி வைத்திருந்த இயந்திரம், சாக்குகள், அரிசி, கோதுமை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்த மினிலாரியை ஆய்வு செய்ததில் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதனையும் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து இன்ஸ்பெக்டர் விஜயரங்கனிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் கோதுமை மற்றும் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக மணிகண்டன், கார்த்திகேயன் மற்றும் ராதா ஆகிய 3 பேர் மீது குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயன் மற்றும் ராதா ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.