ரோம் நகரில் நடைபெறவிருக்கும் உச்சி மாநாட்டில் இருபது நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இத்தாலியின் தலைநகரான ரோமில் இன்று மற்றும் நாளை ஜி-20 நாடுகளின் 16வது உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். மேலும் அவர் இத்தாலி பிரதமரான மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் மற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக இந்த மாநாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், காலநிலை மாற்றம், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி வாடிகன் சென்று போப்பாண்டவரை சந்திக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதனையடுத்து பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிற்காக கிளாஸ்கோ செல்ல இருக்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் 26வது கட்சிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
அதிலும் இந்த மாநாடானது நவம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார். இந்த மாநாடுகளில் எல்லாம் பங்கேற்பதற்காக ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று காலை ரோம் நகரை அடைந்துள்ளார்.