சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கண்டிபுதூர் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவசங்கரின் மனைவி கீதா காய்கறி வாங்குவதற்கு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து தோல்மண்டி 4 ரோடு அருகே நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கீதா அணிந்திருந்த 7 பவுன் தங்க தாழி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதில் கீதா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து கீதா பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.