மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தன.ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மாண் சேனா ஒரு இடத்தில் வெற்றிபெற்று தனது கணக்கைத் தொடங்கியது. சமாஜ்வாதி, பிரகார் ஜனசக்தி, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் ஆகியவற்றிற்கு தலா இரு இடங்களும் கிடைத்தன.
இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட சிவசேனா
பகுஜன் விகாஸ் ஆஹதி கட்சிக்கு மூன்று இடங்கள் கிடைத்தன. இவர்கள் தவிர 13 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். சௌபிமானி பக்ஷா, ராஷ்ட்ரிய சமாஸ் பக்ஷா, மார்க்சிஸ்ட், ஜன் சுவராஜ்ய சக்தி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் (அதாவது முதலமைச்சர் பதவி) என கோரிக்கை விடுத்தது.
உரிமை கோராத பாஜக… சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு…!
இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸும் ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிக இடங்கள் பிடித்து தனிப்பெரும்பான்மை கட்சி என்ற முறையில் பாஜகவுக்கு ஆளுநர் பகத்சிங் அழைப்பு விடுத்தார். ஆனால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது. முன்னதாக சிவசேனா பிரதிநிதிகள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசி ஆதரவு கேட்டனர். அதற்கு அவர், பாஜக கூட்டணியிலிருந்து விலகும்பட்சத்தில் இதுகுறித்து முடிவெடுக்கலாம் என்று கூறி மறுத்துவிட்டார். இதனால் சிவசேனா ஆட்சியமைப்பதிலும் சிக்கல் நீடித்துவந்தது.
மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய சிவசேனா
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிரா முதலமைச்சரை உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுப்பார் என்று கூறியிருந்தார். அதற்கான ஏற்பாடுகளில் சிவசேனா இறங்கியுள்ளது. சிவசேனா ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் மட்டுமின்றி காங்கிரசின் தயவும் தேவைப்படுகிறது.
வலுவான எதிர்க்கட்சியாக அமரும் பாஜக…!
இவ்வாறு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையும்பட்சத்தில், பாரதிய ஜனதா மகாராஷ்டிராவில் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.