மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் ஈஸ்வரன் என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சுனில் என்ற புளுநாயக் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கட்டிட பணியின்போது முதல் மாடியிலிருந்த புளுநாயக்கிற்கு அவருடன் வேலை பார்க்கும் சுக்ரீப் நாயக் என்பவர் சென்டரிங் கம்பியை எடுத்து மேலே கொடுத்துள்ளார்.
அப்போது அருகில் உள்ள மின் கம்பியில் சென்டரிங் கம்பி படுவதை கவனிக்காமல் அதை வாங்கும்போது புளுநாயக் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் முதல் மாடியில் இருந்து புளுநாயக் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் புளுநாயக்கை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக புளுநாயக் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புளுநாயக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.