அரசு பேருந்து-லாரி மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடி நோக்கி அரசு பேருந்து ஒன்று திம்பம் மலைப்பாதையின் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதனையடுத்து பேருந்து திம்பம் மலைப்பாதையில் 22-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு சோள பாரம் ஏற்றிச் சென்ற லாரியும், அரசு பேருந்தும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் சத்தமிட்டனர்.
இந்த விபத்தினால் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். எனினும் பேருந்து சேதமடைந்து விபத்து ஏற்பட்டதால் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி மற்றும் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணி நிறைவடைந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது. இவ்வாறு ஏற்பட்ட விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.