ராணுவ தளபதியை பதவி விலக வேண்டும் என்று கூறியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் Qamar Javed Bajwa. இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பு வகிக்கிறார். மேலும் இவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் ராணுவ ஜெனரலான ஜாஃபர் மேஹதி அஸ்காரியின் மகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவி காலத்தை நீட்டித்தது தொடர்பாக எதிர்க் கருத்து தெரிவித்தும் எழுதியுள்ளார். இதன் காரணமாக முன்னாள் ராணுவ ஜெனரலின் மகனான ஹாசன் அஸ்காரிக்கு எதிராக தேசத் துரோக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டதில் “இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஹாசன் குற்றத்திற்கு சாட்சி கூறியுள்ளார். அதிலும் சிறையில் இருக்கும் தனது மகனை சந்திப்பதில் சிரமமாக இருப்பதாக ஜாஃபர் மேஹதி அஸ்காரி புகார் அளித்திருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் பொழுது அதனை கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. குறிப்பாக விசாரணையின் போது ராணுவத்தை சேராத ஒருவரை ராணுவ நீதிமன்றம் விசாரிக்க இயலுமா என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக குடிமகன்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பது தொடர்பான முடிவை நீதிமன்றம் விரைவில் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.