கனடாவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவர் நீரில் மூழ்கி சடலமாக நாடு திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் குஜராத்தை சேர்ந்த ராகுல் மகிஜா (23) என்ற மாணவர், கடந்த 2019 ஆம் ஆண்டு BBA படிப்பதற்காக கனடாவிற்கு சென்றார். மேலும் அவர் பயின்ற MSU பல்கலைக்கழகத்தில் BBA மாணவர் சங்க தலைவராக இருந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி, இந்தியாவில் வசிக்கும் ராகுலின் தந்தை சுனில் மகிஜாவுக்கு கனடாவில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.
அந்த அழைப்பு குறித்து சுனில் மகிஜா கூறியதாவது, “ராகுலும் அவனது நண்பர்களும் அண்டாரியோ மாகாணத்தில், Bruce Peninsula தேசிய பூங்காவிற்கு சென்றனர். அப்போது சிலர் ஒரு குன்றின் கீழே உள்ள தண்ணீரில் குதித்தனர். இவர்களில், நீர்மட்டத்தின் கீழே சென்ற ராகுல் சில நிமிடங்களுக்கு மேலே வராததால் அவரது நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர், ராகுலின் உடலை அவரது நண்பர்கள் வெளியே எடுத்தனர்.
இதனை தொடர்ந்து, உள்ளூர் காவலர்கள் ராகுலை உயிர்ப்பிக்க முயன்ற போது அவரை காப்பாற்ற முடியாமல் உயிரிழந்தார். மேலும் ராகுலின் உடலை பரிசோதித்த மருத்துவர் ஜார்ஜ் ஹர்பூர், நீரில் மூழ்கிய ராகுலுக்கு நீச்சல் தெரியாது என்றும், நீரின் வெப்பநிலை மைனஸ் 15℃ இருந்தது என்றும் உள்ளூர் இணையதளத்தில் அறிவித்தார்” என்று கூறினார்.
மேலும் ராகுல் கனடாவின் டொராண்டோவில் உள்ள செனிகா கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து முடித்து, மேலும் படிக்க திட்டமிட்டிருந்தார். தற்போது ராகுலின் உடலை மிகவும் சிரமப்பட்டு 8 நாட்களுக்கு பின் குஜராத்தின் வதோதரா நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கொண்டு வந்ததாக அவரது தந்தை சுனில் கூறினார். மேலும், ராகுலின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் ராகுலின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.