முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் என கேப்டன் விராட் கோலி ஷமிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இதனால் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தைகளாலும் ,மதரீதியாகவும் அவரை கடும் விமர்சனம் செய்தனர். அதோடு அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தனது கருத்துக்களை தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேட்டபோது அவர் கூறுகையில்,” ஒருவரை மதரீதியாக தாக்கிப் பேசுவது தான் மனிதர்கள் செய்யும் மிக மோசமான காரியமாகும் .
சமூக வலைத்தளங்களில் பேசும் முதுகெலும்பற்ற இது போன்ற நபர்களை கண்டு கொள்ள தேவையில்லை. அவர்கள் நேரில் பேச தைரியம் இல்லாதவர்கள் .மதம் என்பது புனிதமானது ,அது தனிநபர் சார்ந்தது .அதில் மற்றவர்கள் தலையிட கூடாது .மேலும் இந்திய அணிக்காக முகமது ஷமி பல வெற்றிகளை கொடுத்துள்ளார். அதோடு முன்னணி பவுலராகவும் திகழ்கிறார். அதை எல்லாம் பார்க்காமல் இப்படி கொச்சைப்படுத்தி பேசுபவர்களுக்காக என்னுடைய வாழ்நாளில் ஒரு நிமிடம் கூட நான் செலவு செய்ய விரும்பவில்லை. மேலும் இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் முகமது ஷமிக்கு துணை நிற்கிறோம். எங்களுடைய சகோதரத்துவம், நட்புறவை அசைத்துப் பார்க்க முடியாது ,” இவ்வாறு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.