கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் சங்கமித்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு லதா என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 20ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள லதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடுக்கு திரும்பி சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கபிலர்மலை செம்மடை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரேவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சங்கமித்திரனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சங்கமித்திரன் மற்றும் லதா இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதற்கிடையே அதிர்ஷ்டவசமாக 1 1/2 வயது குழந்தை எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக சங்கமித்திரன் மற்றும் லதாவை மீட்டும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கமித்திரம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து லதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இது குறித்து ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.